சென்னை: அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, கூட்டணி கட்சிகளை கழட்டி விட்டு, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் கூட தி.மு.க., அமோக வெற்றி பெறும் என தலைவர் ஸ்டாலினிடம், அக்கட்சியின் திடீர் ஆலோசகரும் அக்கட்சியினரால் தேர்தல் சாணக்யன் ‛திமுக காப்பான்' என அழைக்கப்படுபவருமான பிரசாந்த் கிஷோர் பாண்டே ஐடியா கொடுத்துள்ளார். இதைக் கேள்விப்பட்டு திமுகவின் கூட்டணி கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டு முறை அ.தி.மு.க., ஆட்சியை பிடித்ததால், 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டும் என தி.மு.க., தலைமை கருதுகிறது. அதற்கு என்ன செய்யலாம் என அக்கட்சி யோசித்துக்கொண்டு இருந்தபோது, தேர்தல் வித்தகர், திமுகவை அரியணையில் வீற்ற வைக்க வந்த சாணக்கியன் பிரசாந்த் கிஷோர் பாண்டேயின் நினைவு கட்சி தலைமைக்கு வந்தது. உடனே அவரை ஒப்பந்தம் செய்தனர். தேர்தல் ஆலோசனைகளை வழங்குவதற்கு கிஷோர் ரூ.300 கோடி வரை ‛பீஸ்' வாங்குவார் என கூறப்படுகிறது. திமுகவை அரியணையில் அமர வைக்க வந்த சாணக்கியன் என்பதாலும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையிலும் இந்த கட்டணத்தைக் கூட கொடுக்க திமுக தலைமை தயாரானது.
இந்த தகவல் தெரிந்து அக்கட்சியின் அப்போதைய ஆலோசகர் சுனில் பதவி விலகினார். உடனே பிரசாந்தை 2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக ஒப்பந்தம் செய்தது. இப்போது அவரது ஆலோசனைகளை கேட்டு தான் கட்சி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு, தேர்தல் சாணக்கியன், ‛‛திமுக காப்பான்'' பிரசாந்த் கிஷோர் பாண்டே தெரிவித்த சில ஆலோசனைகள் எனக்கூறி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது தி.மு.க.,விற்கு ஆதரவான அலை வீசுகிறது எனவும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை தாரை வார்க்காமல், தனித்து போட்டியிட்டால் கூட ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் அமோக வெற்றி பெறலாம் எனவும் அவர் ஐடியா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசல் புரசலாக இதை அறிந்த கூட்டணி கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. தொகுதிகளும் போய்விடும், பெட்டியும் கிடைக்காது எனகூட்டணி கட்சிகள் புலம்புகின்றனவாம். இந்த தகவல் திமுக வட்டாரங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.